தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மோதல் முற்றுகிறது

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளும், தயாரிப்பாளர்களும் போட்டி, போட்டு எதிர்ப்பு கூட்டம் நடத்துவதால் தயாரிப்பாளர்களுக்கும், சங்க நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் முற்றிவருகிறது.

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக இருந்த ராம.நாராயணன், பதவியை ராஜினாமா செய்ததும், துணைத் தலைவராக இருந்த திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், சங்கத்தின் செயற்குழு மூலம் தலைவராக்கப்பட்டார். "முறையாக தேர்தல் நடத்தித் தான், தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.  குறுக்கு வழியில் எஸ்.ஏ.சந்திரசேகர் தலைவரானது சங்க விதிகளின் படி தவறானது. ராம.நாராயணன், சங்கத்தில் தலைவராக இருந்த போது, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடந்த ஊழலை மறைக்கவே எஸ்.ஏ.சந்திரசேகர் சங்கத் தலைவராக்கப்பட்டுள்ளார்  என, பல தயாரிப்பாளர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சங்கத்திற்கு முறையாக தேர்தல் நடத்தி, தலைவர் மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் திரைப்படத் தயாரிப்பாளர்கள் கே.ஆர்.ஜி., கேயார் மற்றும் 100க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள், கடந்த 14ம் தேதி சங்கத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இப்பிரச்னை குறித்து பேசி முடிவு செய்ய, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது.

அப்போது, தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 50க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள், "ராம.நாராயணன் மற்றும் நிர்வாகிகளால் சங்கத்தில் ஊழல் நடந்துள்ளது. அரசியல் சாயம் பூசி பல தயாரிப்பாளர்கள், பல வழிகளில் சங்கடத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.  தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க அறக்கட்டளை அறங்காவலர் பதவியை ராம.நாராயணனும், சிவசக்தி பாண்டியனும் இன்னும் ராஜினாமா செய்யவில்லை.

சங்க ரசீது புத்தகங்களை எஸ்.ஏ.சந்திரசேகர், வீட்டிற்கு எடுத்துச் சென்று வந்துள்ளார். சங்கத்தில் நடந்துள்ள பலகோடி ரூபாய் ஊழலை சந்திரசேகர், முன்னாள் நிர்வாகிகளுக்கு ஆதரவாக மறைக்கப் பார்க்கிறார் என்றும் குறை கூறினர்.  இதனால்,  பரபரப்பு ஏற்பட்டது. செயற்குழு கூட்டம் பாதியில் முடிந்தது. மீண்டும் வரும் 22ம் தேதி செயற்குழு கூட்டத்தை கூட்டி, அடுத்த கட்ட முடிவு எடுக்க சந்திரசேகர் முடிவு செய்துள்ளார்.
இதற்கிடையில், சந்திரசேகரின் எதிர்ப்பு அணியைச் சேர்ந்த முக்கிய தயாரிப்பாளர்கள், ஒட்டுமொத்த தயாரிப்பாளர்களையும் இன்று  திரட்டிவந்து, மாலை 4 மணிக்கு, நுங்கம்பாக்கத்தில் உள்ள பாம்குரோவ் ஓட்டலில் கூட்டம் நடத்தி, அடுத்த கட்ட முடிவு எடுப்பதாக அறிவித்துள்ளனர்.  இதனால், மீண்டும் தயாரிப்பாளர்கள், சங்க நிர்வாகிகள் இடையே மோதல் முற்றிவருகிறது. ( தினமலர் நியூஸ் )

Comments

Popular posts from this blog

‘வாட்ஸ் அப்’பில் வெளியான அதிர்ச்சி வீடியோ போதை மறுவாழ்வு மையத்தில் கடுமையாக தாக்கப்பட்ட வாலிபர் தற்கொலை

கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு

இன்று மாலை 06 மணிக்கு அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் மீண்டும் கூடுகிறது