நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லீட்டருக்கு ரூ.5 ஆல் அதிகரிப்பு

இன்று (சனிக்கிழமை) நள்ளிரவு முதல், பெட்ரோல் விலை லீட்டருக்கு 5 ரூபாய்க்கு உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்த்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லீட்டருக்கு 4.99 முதல் 5.01 ரூபாய் வரை உயர்த்தியுள்ளன. பெட்ரோல் விலை திடீரென லீட்டருக்கு 5 ரூபாய் வரை உயர்வடைவது இதுவே முதல் முறை ஆகும். பெட்ரோல் விலையை கடந்த ஜனவரி மாதமே உயர்த்துவதற்கு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டிருந்தன.

எனினும் தமிழகம், கேரளா உள்ளிட்ட ஐந்து மாநில சட்ட சபை தேர்தலை கருத்தில் கொண்டு, மத்திய அரசு பிறப்பித்த வாய்மொழி உத்தரவால், விலையை உயர்த்துவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சட்ட சபை தேர்தல் முடிவுகளும் வெளிவந்துள்ளதால் இவ்விலையேற்றம் அமலுக்கு வருகிறது.

இதனால், டீசல் விலை லீட்டருக்கு ரூ.4 இனாலும் , எரிவாயு விலை ரூ.20-25 இனாலும் உயர்த்தபடவிருப்பது குறிப்பிடத்தக்கது.  இதையடுத்து இந்தியன் ஆயில் கார்பரேஷன் விற்பனையில், டெல்லியில் இதுவரை லீட்டருக்கு ரூ 58.37 ஆக இருந்து வந்த பெற்றோல் விலை நாளை முதல் லீட்டருக்கு ரூ63.37 ஆக உயர்த்தப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்னெய் விலை உயர்வடைந்ததை அடுத்து லீட்டருக்கு ரூ.10.50 ஆகவே பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். எனினும் இந்திய எண்ணெய் நிறுவனங்களின் கூட்டு நடவடிக்கை மூலம், இத்தொகை லீட்டருக்கு ரூ5 ஆக உயர்த்தப்படுவதாக பெற்றோலிய கூட்டுத்தாபன தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெட்ரோல் மீதான விலை நிர்வாக கட்டுப்பாட்டு முறையை, கடந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு கைவிட்டு விட்டதிலிருந்து இன்றுடன் 8வது தடவையாக எண்ணெய் விலை உயர்வடைந்துள்ளது.

இதேவேளை பெட்ரோல் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் ஒரு ஆண்டுக்குள் பெட்ரோல் விலை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இது தங்கத்தின் விலை உயர்வை விட மிகவும் அதிகமாகும். பெட்ரோல் விலையில் பாதிக்கும் மேல் வரியாக வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், அதை குறைக்காமல் சுமையை மக்கள் மீது சுமத்துவது சரியல்ல. எனவே, பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும்.

பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரிகளை அரசு குறைக்க வேண்டும். சமையல் எரிவாயு விலையை உயர்த்தும் திட்டம் இருந்தால் அதையும் கைவிட வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

‘வாட்ஸ் அப்’பில் வெளியான அதிர்ச்சி வீடியோ போதை மறுவாழ்வு மையத்தில் கடுமையாக தாக்கப்பட்ட வாலிபர் தற்கொலை

கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு

இன்று மாலை 06 மணிக்கு அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் மீண்டும் கூடுகிறது