2015-17-ல் சண்டைகளில் கிட்டத்தட்ட 400 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழப்பு - உள்துறை அமைச்சகம்

2015-17-ல் மூன்று ஆண்டுகளில் எல்லையில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் உள்பட பாதுகாப்பு படைகள் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகளில் கிட்டத்தட்ட 400 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களே அதிகமாக உயிரிழந்து உள்ளனர் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மூன்று ஆண்டுகளில் எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த 167 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் மிகவும் முக்கியமான பாதுகாப்பு மைய இடங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள். 2015-ல் 62 எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களும், 2016-ல் 58 வீரர்களும், 2017-ல் 47 வீரர்களும் உயிரிழந்துள்ளனர். மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 103 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்கள் நக்சலைட் தீவிரவாதிகள் மற்றும் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்துள்ளனர். 2015-ல் 9 வீரர்களும், 2016-ல் 42 வீரர்களும், 2017-ல் 52 வீரர்களும் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சஷாஸ்திர சீமா பல் (எஸ்.எஸ்.பி.) படைப்பிரிவை சேர்ந்த 48 படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இப்படைகள் பூடான், நேபாளம் எல்லையில் பாதுகாப்பு பணியில் உள்ளது. எல்லையை தவிர்த்து நாட்டிற்கு உள்ளேயும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகிறது. இந்தியா-திபெத் எல்லையில் பாதுகாப்பு படையில் உள்ள இந்தோ-தீபெத்திய படைப்பிரிவை சேர்ந்த 40 படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியா - மியான்மர் எல்லை பாதுகாப்பு பணியிலும், வடகிழக்கு மாநிலங்களில் பயங்கரவாதத்தை ஒழிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ள அசாம் ரைபிள் பாதுகாப்பு படையில் 35 வீரர்கள் மூன்று ஆண்டுகளில் உயிரிழந்துள்ளனர். விமான நிலையங்கள், மெட்ரோ சேவைகள் மற்றும் பிற முக்கியமான மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள சிஐஎஸ்எப் படையை சேர்ந்த 2 வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என உள்துறை அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

‘வாட்ஸ் அப்’பில் வெளியான அதிர்ச்சி வீடியோ போதை மறுவாழ்வு மையத்தில் கடுமையாக தாக்கப்பட்ட வாலிபர் தற்கொலை

கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு

இன்று மாலை 06 மணிக்கு அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் மீண்டும் கூடுகிறது