மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஜூலை 21-ல் மதிமுக முற்றுகைப் போராட்டம்: வைகோ

காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை அமைக்க வலியுறுத்தி காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஜூலை 21-ஆம் தேதி முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்துக்கு 192 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும், இதனை உறுதி செய்ய, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகிய அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் அரசியல் சட்டத்தின்படி அதிகாரம் கொண்ட காவிரி நடுவர் நீதிமன்றம் 5-2-2007-ல் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட காங்கிரஸ் கூட்டணி அரசு 5 ஆண்டுகள் கால தாமதம் செய்தது. உச்ச நீதிமன்றம் கடுமையான உத்தரவு பிறப்பித்த பிறகே 19-2-2013-ல் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது.
இதனை நடைமுறைப்படுத்த வேண்டிய அரசு, 24-5-2013-ல் சட்டப் பூர்வ அதிகாரம் இல்லாத மேற்பார்வைக் குழுவை அமைத்தது. நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகம் மறுத்தபோது இக்குழுவால் எதுவும் செய்ய முடியவில்லை.
மத்திய புதிய அரசு அமைந்தவுடன் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமரைச் சந்தித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும் விதத்தில் நடுவர் மன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்கு முறைக் குழு ஆகிய அமைப்புகளை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும்.
இதனை வலியுறுத்தி காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் காவிரி பாசனப் பகுதிகளில் உள்ள 5 மாவட்டங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு முற்றுகைப் போராட்டமும், தஞ்சாவூர் மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்டமும் நடைபெறவுள்ளது. இதற்கு மதிமுக முழு ஆதரவு அளிப்பதாக வைகோ தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

‘வாட்ஸ் அப்’பில் வெளியான அதிர்ச்சி வீடியோ போதை மறுவாழ்வு மையத்தில் கடுமையாக தாக்கப்பட்ட வாலிபர் தற்கொலை

கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு

இன்று மாலை 06 மணிக்கு அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் மீண்டும் கூடுகிறது