இளையராஜாவுக்கு கங்கை அமரன் கண்டனம்

பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தற்போது ‘எஸ்.பி.பி.-50’ என்ற பெயரில் வெளி நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து இசைக் கச்சேரி நடத்தி வருகிறார்.

இந்த இசை நிகழ்ச்சிகளில் இளையராஜாவின் இசையில் தான் பாடிய பாடல்களையும் பாடி வருகிறார். இது தொடர்பாக எஸ். பி.பாலசுப்பிரமணியத்துக் கும், அவருடன் பாடும் சித்ராவுக்கும் இளையராஜா சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், ‘நான் இசை யமைத்த பாடல்களை மேடைக் கச்சேரிகளில் பாடி னால் காப்புரிமை சட்டத்தின் கீழ் வழக்கு தொடருவேன்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு எஸ்.பி.பால சுப்பிரமணியம் தனது ‘பேஸ்புக்‘ பககத்தில் பதில் அளித்தார். அதில், “காப் புரிமை சட்டம் பற்றி எனக்கு விழிப்புணர்வு கிடையாது. ஆனாலும் அந்த சட்டத்தை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன். 

நானும், எங்கள் குழுவின ரும் இனி இளையராஜா பாடல்களை மேடைகளில் பாட மாட்டோம். இளைய ராஜா தவிர பல இசையமைப் பாளர்களின் இசையில் நான் பாடியிருக்கிறேன். அந்த பாடல்களை இனி வரும் கச்சேரிகளில் பாடுவேன்” என்றார்.

இந்த நிலையில் தான் இசையமைத்த பாடல்களை எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மேடைகளில் பாடக்கூடாது என்று கூறிய இளையராஜா வுக்கு அவரது தம்பியும், டைரக்டரும், ஆர்.கே.நகர் தொகுதி பா.ஜனதா வேட் பாளருமான கங்கைஅமரன் கடும் கண்டனம் தெரிவித் துள்ளார்.

இது தொடர்பாக கங்கைஅமரன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

பாட்டாலே புத்தி சொன் னார் பாட்டாலே பக்தி சொன்னார், ஆணென்ன பெண்ணென்ன நீ என்ன நான் என்ன எல்லாம் ஓரினம் தான் ஆகிய பாடல் களை போட்டு விட்டால் அதில் மக்கள் மயங்கி கிடக்கிறார்கள்.

நாளைக்கு இளைய ராஜாவே எல்லா வீட்டுக்கும் நோட்டீஸ் அனுப்பி என் பாடல்களை போடாதீர்கள். போட்டால் காப்புரிமை கொடுக்க வேண்டும் என்றால் அது அசிங்கம் இல்லையா?
காப்புரிமை என்பது அவருக்கான சம்பாத்தியத் துக்கான விஷயம். காப்புரிமை எதற்காக வாங்குகிறார்கள். அதனால் தனக்கு பணம் வரும். மக்கள் இலவசமா பாடட்டுமே? மெல்லிசை கச்சேரி நடத்துபவர்கள் கச்சேரி கிடைக்காமல் தவிக்கிறார்கள். 

இந்த பாடல்கள்தான் கச்சேரிக்கான வாய்ப்புகளை கொடுக்கிறது. அவர்களிடம் பணம் கேட்கிறீர்களா? அந்த பணத்தை வாங்கி நாம் பிழைக்க வேண்டுமா? அவ்வளவு பஞ்சத்திலா கிடக்கிறோம்.பெரிய பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஜேசுதாஸ் போன்றவர்கள் பாடிய பாடல்களை டிக்கெட் எடுத்து கச்சேரிக்கு போய் ரசிகர்கள் கேட்டால் அதை பாடாதே என்றால் என்ன அர்த்தம்.

இளையராஜா ஏற்கெனவே பாடிய தியாகராஜர் கீர்த்தனைக்கோ, எம்.எஸ்.விஸ்வநாதன் பாடல்களுக்கோ முன்னுரிமை வாங்கினாரா? தியாகராஜர் கீர்த்தனையை அவர் பாடிய போது தியாகராஜரிடம் போய் கப்பம் கட்டினாரா? முத்துசாமி தீட்சிதர் பாடல்களை பாடும்போது அவருக்கு நன்கொடை கொடுத்தாரா? இது என்ன விளையாட்டு?

மெல்லிசை பாடகர்கள் இளையராஜாவின் பாடல்களை பாடித்தான் சம்பாதித்திருக்கிறார்கள். அவர்களை பாடக்கூடாது என்று சொல்லக்கூடாது. இளையராஜா பாடல்களை ஏற்கெனவே விற்று விட்டார். அதற்குரிய சம்பளத்தையும் வாங்கி விட்டார். இப்போது அவை எல்லாமே மக்களின் சொத்தாகி விட்டது.

நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான் பாடலை திருமணத்தில் பாட வேண்டிய கட்டாயம் இருக்கு. அந்த பாடலை மெல்லிசை கலைஞர்கள் பாடுவதால் இளையராஜாவுக்கு பணம் கொடுக்க வேண்டுமா? அந்த பணம் வேண்டும் என்றால் அதை நான் தருகிறேன்.

எந்த இசையமைப்பாளர் இதுவரை பங்கு கேட்டிருக்கிறார்? இவர் ஏன் பங்கு கேட்க வேண்டும்? மக்கள் விரும்பக்கூடியது இலவசமாக கிடைத்துதான் ஆக வேண்டும்.

பாடல்களை எல்லோரும் காரில் போடுகிறார்கள். கூடவே சேர்ந்து முணு முணுக்கிறார்கள். பாடல்களை காரில் போடத்தான் வேண்டும். அதற்கு தான் ராயல்டி. கூடவே சேர்ந்து முணுமுணுக்க எனக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்டால் கேவலமாக இல்லையா?

1000 பேர், 10 ஆயிரம் பேர் சேர்ந்து கேட்கும் கச்சேரிகளில் எந்த மாதிரியான பாடல்களை கேட்பார்கள் என்று தெரியாதா? எம்.எஸ்.விஸ்வநாதன் பாடல்களை நிறைய நாங்கள் காப்பி அடித்துள்ளோம். அவருக்கு எதுவும் கொடுக்கவில்லை.

தியாகராஜர் கீர்த்தனையில் இருந்து நிறைய போட்டோம். அவருக்கும் எதுவும் கொடுக்கவில்லை. முத்துசாமி தீட்சிதரின் எத்தனையோ பாடல்களை போட்டுள்ளோம். அவருக்கும் எதுவும் கொடுக்க வில்லை. பழைய இசையில் ஜி.ராமநாதன் பாடல்களை மாற்றி மாற்றி பல பாடல்களை கொடுத்துள்ளோம். அவரோட குடும்பத்துக்கு நீங்க உதவி செய்தீர்களா? இளையராஜாவுக்கு பணம் கேட்கும் ஆசை வரக்கூடாது. இசையில் இளையராஜாவை அனைவரும் தெய்வமாக பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் எனது பாடல்களை பாடக்கூடாது  என்று அவர் கூறினார். அது போன்ற அபசகுனம் எதுவும் கிடையாது.

பணத்தை கொடுத்தால் பாடவிட்டுவிடுவார்.அப்படி சம்பாதிக்க வேண்டுமா? சம்பாதித்தது போதாதா? எஸ்.பி. பாலசுப்பிரமணியம் 10 பாட்டு பாடினாரு. அந்த  பாட்டுக்கு ஒரு பாட்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் என்று போட்டு கொடுத்தால் திருப்தியா?

இளையராஜா சாப்பிடுவது, கொஞ்சம் இட்லி, கொஞ்சம் சோறு, 2 சப்பாத்தி இதுக்கு எதுக்கு அவ்வளவு பணம். சட்டங்களை பார்த்து நாமும் கேட்போமே என்று கேட்காதீர்கள். தென்றல் எப்படி வீசுதோ? வெயில் எப்படி அடிக்குதோ? மழை எப்படி பெய்யுதோ அது போல இயற்கையாக கிடைக்கும் இளையராஜா பாடல்களை கச்சேரிகளில் பாடும் போது தடுக்க என்ன உரிமை இருக்கிறது.

மேற்கத்திய பாடல்களை எல்லோரும் பாடுகிறார்கள். அதற்காக யாரும் கப்பம் கட்டிக் கொண்டிருக்கிறார்களா? கிளப்பில் பாடல்களை போடுகிறோம். இதற்கு ராயல்டி போகிறதா? எதற்கு இந்த புதிய முயற்சி. ஏன் இந்த வீண் வாதம்.

ஏற்கனவே ஒரு படத்துக்காக இசையமைத்து வெளிவந்து மக்களால் பாராட்டப்பட்ட பாடல்களை திரும்ப திரும்ப கேட்கும் பாடல்களை கச்சேரிகளில் பாடித்தான் ஆக வேண்டும். அதற்கு தடைபோடுவது என்ன அர்த்தம். அவர் அப்படி இருக்க கூடாது. அவர் எப்போது திருந்து வார் என்பது எனக்கு தெரியவில்லை. அவருக்கு என்ன ஆயிற்று என்று தெரிய வில்லை.

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடக்கூடாது என்று நினைக்கிறாரா அல்லது வேறு யாரும் பாடக் கூடாது என்று நினைக்கிறாரா அல்லது யாருமே பாடக்கூடாது என்று நினைக்கிறாரா? பேசாமல் பாடல்களை திரும்ப வாங்கிட்டுப்போய் லாக்கரில் வைத்து பூட்டி வைக்க வேண்டியது தானே? மக்களுக்கு இலவசமாக சந்தோஷங்களை கொடுங்கள். 

ஒரு பாடலை கேட்கும் போது இலவசமாக அனுபவிக்கும் போது மக்கள் சந்தோஷத்தை பெறட்டுமே? அது போதுமே. நாம் என்ன பணம் இல்லாமல் கஷ்டப்படவா செய்கிறோம். அந்த பணம் வேண்டாம்.இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து பாடலாசிரியர் மதன் கார்க்கி கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் பாடல்களின் ராயல்டி இசை அமைப்பாளருக்கு மட்டும் சொந்தமில்லை. அந்த பாடலை எழுதிய பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளருக்கும் சொந்தம். இளையராஜா சொல்வது சரிதான் என்றாலும் கூட, அவரே வெளியில் பாடல்களை பாடினால் பாடலாசிரியரிடமும், தயாரிப்பாளரிடமும் அனுமதி பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.

எஸ்பிபி மற்றும் சித்ராவுக்கு நோட்டீஸ் அனுப்பியதற்கு பதிலாக ஒரு போன் கால் செய்து இந்த விஷயத்தை சொல்லியிருக்கலாம் என மதன் கார்க்கி தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

விருத்தாசலம் அடுத்த செம்பளாக்குறிச்சியில் ரயில் மரியலில்

நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லீட்டருக்கு ரூ.5 ஆல் அதிகரிப்பு

தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் விடுதலை