மன்ஹட்டன், நியூஜெர்சி குண்டு வெடிப்பு குற்றவாளி அகமத் கான் ரகாமி கைது


அமெரிக்காவின் மன்ஹட்டன், நியூஜெர்சி குண்டுவெடிப்பு குற்றவாளி அகமத் கான் ரகாமியை போலீஸ் கைது செய்தது.

அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் நியூஜெர்சி நகரங்களை மையமாக வைத்து கடந்த 3 நாட்களாக குண்டுவெடிப்புகள் நிகழ்ந்து வருகின்றன. முதலாவதாக நியூஜெர்சி கடற்கரையோர பூங்கா நகரில் கடந்த 17–ந்தேதி காலையில் திடீரென வெடிகுண்டு வெடித்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அன்று இரவு மன்ஹட்டன் அருகே உள்ள செல்சீ நகரில் வெடிகுண்டு வெடித்தது. இதில் 29 பேர் படுகாயமடைந்தனர். சிறிது நேரத்துக்குப்பின் அந்த பகுதியில் இருந்து சற்று தொலைவில் மற்றொரு வெடிக்காத குண்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவங்களால் நிகழ்ந்த பரபரப்பு அடங்குவதற்குள் அதிகாலையில் நியூஜெர்சியில் சக்திவாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடித்தது. அங்குள்ள எலிசபெத் ரெயில் நிலையம் அருகே குப்பைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த இருவர், அங்கே பையில் மர்ம பொருள் இருந்ததை கண்டுபிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். வெடிகுண்டை செயலிழக்க செய்யும் ரோபோ மூலம் அந்த பையை சோதனையிடப்பட்டது. அப்போது அதில் இருந்த வெடிகுண்டு திடீரென வெடித்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்த சம்பவங்களை தீவிரவாத செயல்கள் என கூறியுள்ள போலீசார் இவை தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர். இதற்கிடையே அமெரிக்காவின் புலனாய்வு பிரிவான எப்.பி.ஐ. அமெரிக்காவின் மன்ஹட்டன், நியூஜெர்சி குண்டுவெடிப்பு குற்றவாளியின் புகைப்படத்தை வெளியிட்டது. மிகவும் பயங்கரமானவன் என்று குறிப்பிட்ட எப்.பி.ஐ. அவன் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டது. ஆப்கானிஸ்தானில் பிறந்த அமெரிக்க குடிமகன் உரிமம் பெற்ற அகமத் கான் ரகாமியின் புகைப்படம் வெளியிடப்பட்டது. 

இந்நிலையில் அமெரிக்க போலீசார் லின்டென்னில் குற்றவாளி அகமத் கான் ரகாமியை கைது செய்து உள்ளனர். போலீஸ் அகமத் கான் ரகாமியை பிடிக்க முயற்சித்தபோது அவன் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டதாகவும், இதில் ஒரு போலீசார் காயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. துப்பாக்கி சண்டையை அடுத்து பிடிபட்ட அகமத் கான் ரகாமியை போலீஸ் காவலில் எடுத்து உள்ளது.

Comments

Popular posts from this blog

‘வாட்ஸ் அப்’பில் வெளியான அதிர்ச்சி வீடியோ போதை மறுவாழ்வு மையத்தில் கடுமையாக தாக்கப்பட்ட வாலிபர் தற்கொலை

கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு

இன்று மாலை 06 மணிக்கு அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் மீண்டும் கூடுகிறது