'அஞ்சான்' படத்தின் பாடல்கள் திரையீடு, டிரைலர் திரையீடு இவற்றோடு சத்தமில்லாமல் இசை வெளியீட்டையும் இன்று நடத்தி முடித்துவிட்டார்கள். விழா நடைபெற்ற சத்யம் திரையரங்கினுள், ஐந்தடிக்கு ஒரு 'அஞ்சான்' பேனர் என வழி நெடுகிலும் கண்ணைப் பறிக்கும் விளம்பரங்கள் இடம் பெற்றிருந்தன. படத்தில் பாடல்கள் உருவான விதத்தைப் பற்றி இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர்கள் நா.முத்துக்குமார், விவேகா, கபிலன், மதன் கார்க்கி ஆகியோர் பேசி முடித்ததும், படத்தில் நடித்த நடிகர்களை அடுத்து மேடை ஏற்றினார்கள். நிகழ்ச்சித் தொகுப்பாளர் யாரோ எழுதிக் கொடுத்த கேள்விகளைக் கேட்கக் கேட்க மற்றவர்கள் பதில் சொன்னார்கள். படத்தில் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்த சூரியிடம், அவர் நடித்துள்ள கதாபாத்திரத்தைப் பற்றிக் கேட்ட போது சூரி, “படத்துல நான் ஒரு டாக்சி டிரைவரா நடிச்சிருக்கேன். சூர்யா மும்பைக்கு முதன் முதலாக வந்து இறங்கும் போது...அவர் என்னைதான் முதல்ல சந்திப்பாரு....” என பேச ஆரம்பித்தார். அப்போது எதிரில் அமர்ந்திருந்த சூர்யா ரசிகர்கள், “கதையைச் சொல்லாத...கதையைச் சொல்லாத” என குரல் எழுப்பினார்கள்....