‘வாட்ஸ் அப்’பில் வெளியான அதிர்ச்சி வீடியோ போதை மறுவாழ்வு மையத்தில் கடுமையாக தாக்கப்பட்ட வாலிபர் தற்கொலை

பூந்தமல்லி,
போதை மறுவாழ்வு மையத்தில் வாலிபர் தாக்கப்பட்ட வீடியோ காட்சி ‘வாட்ஸ் அப்’பில் பரவியது. அவர் தற்கொலை செய்து கொண்டதால், போதை மறுவாழ்வு மையத்தில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
போதை மறுவாழ்வு மையம்
சென்னை நொளம்பூர், மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் குப்புசாமி(வயது 35). இவருடைய மனைவி அம்மு. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. குப்புசாமிக்கு குடிப்பழக்கம் இருந்தது.
குடிப்பழக்கத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பதற்காக அவரை, மாங்காடு அடுத்த மவுலிவாக்கத்தில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவரது குடும்பத்தினர் சேர்த்தனர்.
சுமார் 1 மாதம் அங்கு சிகிச்சை பெற்று வந்த குப்புசாமி, கடந்த ஜனவரி மாதம் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அப்போது அவர், தனது மனைவி மற்றும் உறவினர்களிடம் போதை மறுவாழ்வு மையத்தில் தான் சிகிச்சை பெறும்போது குடியை மறக்கும்படி அங்கு பணி புரியும் ஊழியர்கள் தன்னை பலமாக தாக்கினார்கள் என்று கூறி வந்ததாக தெரிகிறது.
வாலிபர் தற்கொலை
இதனால் அவர் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் நேற்றுமுன்தினம் குப்புசாமி தனது வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து நொளம்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையில் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த குப்புசாமியை ஓர் அறைக்குள் வைத்து 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கும் வீடியோ காட்சி ‘வாட்ஸ் அப்’பில் நேற்று வேகமாக பரவியது.
அதிகாரிகள் ஆய்வு
இதையடுத்து சமூக பாதுகாப்பு துறை இணை இயக்குனர் ராஜ்சரவணகுமார் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் மவுலிவாக்கத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
மறுவாழ்வு மையத்தில் குப்புசாமி சிகிச்சை பெற்று வந்தது உண்மையா?, தற்போது அங்கு எவ்வளவு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் அனைவரும் ஊழியர்களால் தாக்கப்படுகின்றனரா? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
தற்போது மறுவாழ்வு மையத்தில் 30–க்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. சம்பவ இடத்துக்கு மாங்காடு போலீசார் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் திரண்டு வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மேல் அதிகாரிகளிடம் தகவல்
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, ‘‘போதை மறுவாழ்வு மையத்தில் இருந்து அடிக்கடி சத்தம் கேட்கும். இதுபற்றி நாங்கள் புகார் கூறிய பிறகுதான் கதவு மற்றும் ஜன்னல்கள் அனைத்தையும் பிளைவுட்டுகள் வைத்து அடைத்தனர். இதனால் எங்களுக்கு சத்தம் கேட்காது’’ என்றனர்.
இதற்கிடையில் போதை மறுவாழ்வு மையத்தில் ஆய்வு முடிந்து அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர். முன்னதாக அதிகாரிகள் கூறும்போது, ‘‘நாங்கள் ஆய்வு செய்த விவரங்கள் குறித்து மேல் அதிகாரிகளிடம் தகவல் தெரிவிப்போம். நாளை (அதாவது இன்று) மீண்டும் வந்து விசாரணை நடத்துவோம். அப்போது என்ன நடவடிக்கை எடுப்பது? என்பது குறித்து முடிவு செய்யப்படும்’’ என்றனர்.

Comments

Popular posts from this blog

கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு