உங்களுடைய பிரதம சேவகன் நான்: டில்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து மோடி உருக்க

புதுடில்லி: இந்த நாட்டின் பிரதம மந்திரியாக நான் உங்கள் முன் நிற்கவில்லை; உங்களுடைய பிரதம சேவகனாக நிற்கிறேன் என்று பிரதமர் நரேந்திரமோடி தமது சுதந்திர தின உரையில் உருக்கமாக கூறினார்.
சுதந்திர தினத்தை ஒட்டி இன்று காலை மகாத்மா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி, காலை 07:30 மணி அளவில் செங்கோட்டை வந்தார். அங்கு முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் அவர் செங்கோட்டை கொத்தளத்தில் மூவர்ண கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அவர் ஆற்றிய உரை வருமாறு: உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் அனைவருக்கும் நாட்டின் பிரதம சேவகன் என்ற முறையில் என் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்; நான் நாட்டின் பிரதம மந்திரியாக உங்கள் முன் நிற்கவில்லை; உங்களுடைய பிரதம சேவகனாகவே நிற்கிறேன்; இந்த சுதந்திரத்திற்காக பல தலைமுறைகள் தங்களின் இளமையையும் வாழ்க்கையும் தியாகம் செய்துள்ளனர்; அவர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்; இது போன்ற தினங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு முன்னுதாரணம்; இந்தியாவை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வதற்கான உந்துசக்தி; இந்த நாடு அரசியல்வாதிகளாலோ அல்லது ஆட்சியாளர்களாலோ அல்லது அரசாங்கத்தாலோ உருவானது கிடையாது. தொழிலாளர்கள், விவசாயிகள், தாய்மார்கள், சகோதரிகள், இளைஞர்கள், ஆசிரியர்கள் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. இன்று கொண்டாடப்படும் இந்த சுதந்திர தினம் இந்தியாவிற்காகவும், இந்தியர்களுக்காகவும் உழைக்க வேண்டும் என்ற வேகத்தை என்னுள் ஏற்படுத்துகிறது.

ஒன்றாக நடப்போம்; ஒன்றாக சிந்திப்போம்:

ஒரு சிறு கிராமத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்த ஒருவரை செங்கோட்டையில் தேசிய கொடிக்கு கீழ் இங்கு கவுரவித்துக் கொண்டிருப்பது தான் நமது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் அழகு. நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட முந்தைய பிரதமர்கள் அனைவருக்கும், முந்தைய அரசுகளுக்கும் நான் எனது வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்; அனைவரும் ஒன்றாக நடப்போம்; ஒன்றாக சிந்திப்போம்; நாட்டை முன்னேற்ற ஒருங்கிணைந்து செயல்படுவோம்; இது நாட்டின் தேசிய விழா மட்டுமல்ல; நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் வாழும் இந்தியனின் விழா;
அனைத்து கட்சிகளும் ஒன்று பட வேண்டும் என நான் விரும்புகிறேன்; எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைவதிலேயே நமது வெற்றி உள்ளது; பாராட்டுக்கள் அனைத்தும் பிரதமருக்கோ அல்லது அரசுக்கோ மட்டும் கிடைத்தால் போதாது. எதிர்க்கட்சிகளுக்கும் கிடைக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். நான் டில்லியைச் சேர்ந்தவன் அல்ல; ஆனால் டில்லிக்கு வந்து இன்று இதில் ஒருவனாகி விட்டேன்; நான் இதை அரசியல் நோக்கில் கூறவில்லை;
எதிர்க்கட்சிகளுடன் இணைந்து:

பார்லிமென்ட் பெரும்பான்மை அடிப்படையில் நாங்கள் பணியாற்ற விரும்பவில்லை. எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றே உறுதி ஏற்றுள்ளோம். கடந்த 2 மாதங்களாக நான் செய்த ஏதும் அரசியல் அடிப்படையிலானது அல்ல; ஒரே அரசின் கீழ் செயல்படும் ஒரு அரசு துறை மற்ற துறைக்கு எதிராக உள்ளது. இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட்டிற்கும் சென்றுள்ளது. இப்படி இருந்தால் நாட்டை எவ்வாறு முன்னேற்ற முடியும்? அரசு துறைகளில் இருக்கும் தடைகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் உடைத்தெறியவே நான் முயற்சி செய்கிறேன்; தற்போது அரசு அலுவலகங்கள் நேரத்திற்கு இயங்குவதாகவும், அதிகாரிகள் சரியாக செயல்படுவதாகவும் டிவி.,க்களிலும் பத்திரிக்கைகளிலும் செய்திகள் வருகின்றன. ஆனால் அவை எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. இது செய்தி அல்ல. கடமை என்பதை அனைவரும் உணர வேண்டும்.
முந்தைய அரசுகளின் செயல்பாடுகளும், உழைப்பும் இல்லாமல் இந்த அளவிற்கு நாட்டை கொண்டு வர முடியாது. அவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். நாட்டை முன்னேற்றுவதே நமது கடமை. அதுவே நமது முன்னோர்களின் கனவு. நாட்டின் ஏழைகளுக்கு எவ்வாறு உதவ வேண்டும் என்பதிலேயே நமது சிந்தனை இருக்க வேண்டும். எதையும் எங்களுக்காக செய்யவில்லை. நாட்டிற்காக எதையாவது செய்ய வேண்டும் என நினைக்கிறோம். என்னை பார்ப்பதை விட நாட்டை பாருங்கள். அரசின் செயல்பாட்டு திறனை அதிகரிக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.சுயநலத்திற்கு முன் நாட்டிற்காக உழைக்க வேண்டும் என நினைக்கிறோம்.
வெட்கமும் வேதனையும்:

நாட்டில் தற்போது நடக்கும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் நம்மை வெட்கி தலைகுணிய வைக்கிறது. பெற்றோர்கள் தங்கள் மகள்களை மட்டு்ம் கேள்வி கேட்கிறார்கள். ஏன் மகன்களை கேட்பதில்லை, கட்டுப்படுத்துவதில்லை. பெண் குழந்தைகளை இழந்து விட வேண்டாம் என பெற்றோர்களை கேட்டுக் கொள்கிறேன்;சட்டம் ஒழுங்கான பாதையில் தான் செல்கிறது; ஆனால் உங்களின் பிள்ளைகள் சரியான பாதையில் செல்கிறார்களா என்று கண்காணிக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்கள் அனைவருக்கும் உண்டு. நாட்டில் நடந்து வரும் வகுவாத கலவரங்கள் மிகுந்த வேதனை அடையச் செய்கிறது. இந்த மோதல்களால் யாருக்கும் எந்த பயனும் இல்லை.
நமது நாட்டின் பாலின விகித வேறுபாடு மிகவும் அதிகமாக உள்ளது. இது கடவுளால் ஏற்படுத்தப்பட்டது இல்லை. டாக்டர்களால். நான் அவர்களை மன்றாடி கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து பெண் சிசுக்களை அழிக்காதீர்கள். ஆண் குழந்தைகள் தான் பெற்றோர்களை காப்பாற்றும் என நினைக்கிறார்கள். ஆனால் 5 மகன்கள் கைவிட்ட பிறகு ஒரு மகள் பெற்றோர்களை கவனிப்பதை நான் பார்த்திருக்கிறேன். இதனை மக்கள் உணர வேண்டும். பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்.விளையாட்டு துறையிலும் பல பெண்கள் சாதித்து, பல பதக்கங்களை வென்று நமது தேசத்தை பெருமையடையச் செய்துள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் 29 பெண்கள் கலந்து கொண்டு நாட்டை பெருமை அடையச் செய்துள்ளனர்.
வளர்ச்சிக்கான பாதை:

அமைதி, ஒற்றுமை, சகோதரத்துவம் ஆகியன மட்டுமே இந்தியாவை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும். நாட்டில் விவசாயிகள் தற்கொலையை தடுக்க பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படும். நல்லாட்சியும் வளர்ச்சியும் மட்டுமே நாட்டை முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்லும். நமது தேசம் இளமையான தேசம். இளைஞர்கள் சக்தியைக் கொண்டு நாட்டை மேலும் பலப்படுத்த வேண்டும். திறமைகளை மேம்படுத்தி, வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.
வளர்ச்சி பாதையில் நாம் உலகில் இருந்து தனிமைபடுத்தப்பட்டோம் என எண்ண வேண்டாம். உற்பத்தி துறையில் வேலைவாய்ப்பை அதிகப்படுத்த வேண்டும். சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதன் மூலம் ஏழைகள் பலரும் வாழ வழிவகை செய்யலாம். மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினத்தை நாம் கொண்டாடுவது, தூய்மையான பணியின் மூலமே அவருக்கு மரியாதை செலுத்த முடியும். நம்மை சுற்றி உள்ள குப்பைகள் என்னை கவலை அடையச் செய்கிறது. தூய்மையான இந்தியாவை உருவாக்க நான் விரும்புகிறேன். அதற்கே எனது முன்னுரிமை. நம்மை சுற்றி உள்ள குப்பைகளை அகற்ற இன்றே உறுதி ஏற்போம். ஒவ்வொரு பள்ளிகளிலும் கழிப்பறைகளை ஏற்படுத்த உறுதி ஏற்போம். எம்.பி.,க்கள் அனைவரும் தனது தொகுதியில் உள்ள பள்ளிகளில் கழிப்பறைகளை ஏற்படுத்த நிதிகளை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பெண்களுக்கான திட்டம்:

பெண்கள் திறந்த வெளியில் தங்கள் இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக இருட்டுவதற்காக காத்திருக்கின்றனர். செங்கோட்டையில் இருந்து இதை கூறுவதில் நான் வெட்கப்படுகிறேன். அக்டோபர் 2 முதல் தூய்மையான இந்தியாவை உருவாக்க விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்துவோம். ஏராளமான திட்டங்கள் பிரதமரின் பெயரிலேயே உள்ளது. இன்று நான் அறிவிக்கிறேன். இனி இத்தகைய திட்டங்கள் பார்லிமென்ட்டின் பெயரால் சன்சத் ஆதர்ஷ் கிராம யோஜனா என்று அழைக்கப்படும். இதற்கான அறிக்கை ஜெய்பிரகாஷ் நாராயணனின் பிறந்தநாளான அக்டோபர் 11 அன்று நான் அளிக்க உள்ளேன். இந்த திட்டங்களை நான் கிராமங்களில் இருந்து துவங்க விரும்புகிறேன்.
சுவாமி விவேகானந்தரின் கனவுகளையும், விருப்பங்களையும் நிறைவேற்ற நினைக்கிறோம். மோடியின் பாதையை இந்தியர்கள் பின்பற்றினால், சிறிதளவு இல்லை, அடுத்த ஓராண்டில் இந்தியா மிகப்பெறிய வித்தியாசமான நாடாக மாறும். மற்றுமொரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராவோம். இதில் நம்மிடம் ஆயுதங்கள் இல்லை. நாம் ஒன்றுபட்டு அந்நிய சக்திகளுக்கு எதிராக செயல்பட வேண்டும். ஏழ்மைக்கு எதிராக போராடி வெற்றி பெறுவோம். இந்த போராட்டத்தில் சார்க் நாடுகளும் நமக்கு கைகொடுக்க தயாராக உள்ளன.
நீங்கள் 14 மணி நேரம் உழைத்தால், நான் 15 மணிநேரம் உழைக்க உள்ளேன். ஏனெனில் நான் பிரதம மந்திரி இல்லை. பிரதம சேவகன்.
முதல் உரை:


சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் பிரதமரான மோடியின் முதல் சுதந்திர தின உரை இது. மோடிக்கு குண்டு துளைக்காத கண்ணாடி பாதுகாப்பு அமைக்கப்படவில்லை; முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்தார்.

Comments

Popular posts from this blog

‘வாட்ஸ் அப்’பில் வெளியான அதிர்ச்சி வீடியோ போதை மறுவாழ்வு மையத்தில் கடுமையாக தாக்கப்பட்ட வாலிபர் தற்கொலை

கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு

இன்று மாலை 06 மணிக்கு அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் மீண்டும் கூடுகிறது