நீதித்துறையும், நிர்வாகமும் எந்தவித தலையீடுமின்றி செயல்பட வேண்டும்: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி

புதுடில்லி: நீதித்துறை, பார்லிமென்ட், நிர்வாகத்துறையில் இருப்பவர்களுக்கு பரஸ்பர மரியாதை உள்ளதாகவும், மூன்று துறையும் எந்தவித தலையீடுமின்றி செயல்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா கூறியுள்ளார்.

சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட்களில் நீதிபதிகளை தேர்வு செய்ய, தற்போது, 'கொலிஜியம்' என, அழைக்கப்படும் நீதிபதிகள் தேர்வுக் குழு உள்ளது. இந்த முறையை மாற்றி, 'நீதித் துறை நியமனங்கள் ஆணையம்' ஒன்றை அமைக்க, மத்திய அரசு முடிவு செய்தது.இது தொடர்பான மசோதாவும், அந்த ஆணையத்திற்கு அரசியல் சட்ட அந்தஸ்து அளிக்க வகை செய்யும் அரசியல் சட்ட திருத்த மசோதாவும், லோக்சபாவில், நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, இந்த மசோதாக்கள், நேற்று ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுப்ரீம் கோர்ட்டில், தேசியக்கொடியை ஏற்றிய தலைமை நீதிபதிலோதா , பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், நீதித்துறை, நிர்வாகத்துறை மற்றும் பார்லிமென்டில் உள்ளவர்களுக்கு பரஸ்பர மரியாதை அளித்து சுயக்கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும். மூன்று துறைகளிலும் உள்ளவர்கள் எந்தவித தலையீடுமின்றி, தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு உட்பட்டு செயல்படுகின்றனர். இந்த மூன்று அமைப்பிலும் உள்ளவர்கள், மற்ற அமைப்புகளில் தலையிடாமல் செயல்படும் வகையில் அரசியல் சட்டத்தில் இடம் உள்ளது. நீதித்துறையாக இருந்தாலும், பார்லிமென்டாக இருந்தாலும், அதிகாரிகளாக இருந்தாலும், சுயக்கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும். நீதித்துறை நடவடிக்கைகளில்மற்ற அமைப்புகள் தலையிடக்கூடாது.

தற்போது நாடு முழுவதும் பல்வேறு கோர்ட்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது, வருத்தம் அளிப்பதாக உள்ளது. கோர்ட்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க போலீசார் மற்றும் நீதித்துறையில் உள்ளவர்களுக்கு தொழில்நுட்ப வசதிகளைமேம்படுத்துவது இந்த தருணத்தில் அவசியமானது. தற்போது சிறைகளில் உள்ள பெரும்பாலானோர், விசாரணை கைதிகளே. இவர்கள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்காததால், அவர்கள் சிறைகளில் தொடர்ந்து வாடுகின்றனர். இதன்மூலம் , அவர்களின் சுதந்திரம், உரிமை பாதிக்கப்பட்டுள்ளது. நீதித்துறைக்கு தலைமை வகிப்பதால், இந்த விஷயம் எனக்கு மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட்களில் நீதிபதிகளை நியமிக்க வேண்டியது, நீதித்துறையின் பொறுப்பு. அதேநேரத்தில் கீழ் கோர்ட்களில் நீதிபதிகளை நியமிக்க வேண்டிய பொறுப்பு, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை சார்ந்தது. கீழ் கோர்ட்டுகளில் தான், ஏராளமான நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டியுள்ளது. நீதித்துறையை பொறுத்தவரை சுமார் ஆயிரம் நியமனங்கள் மட்டுமே செய்யப்படுகிறது. அதேநேரத்தில் நீதித்துறையில், அரசு மூலம் 19 ஆயிரம் நியமனங்கள் நடைபெறுகிறது. இவ்வாறு லோதா குறிப்பிட்டார்.

Comments

Popular posts from this blog

‘வாட்ஸ் அப்’பில் வெளியான அதிர்ச்சி வீடியோ போதை மறுவாழ்வு மையத்தில் கடுமையாக தாக்கப்பட்ட வாலிபர் தற்கொலை

கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு

இன்று மாலை 06 மணிக்கு அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் மீண்டும் கூடுகிறது